கண்ணாடி திரையுடனான செல்லிடப் பேசியைப் பயன்படுத்தி அலுத்துவிட்டதா? கையடக்கத் தொலைபேசியை சுமந்து திரிந்து களைத்துவிட்டீர்களா? ஆம் என்றால், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் வரலாற்றுச் சாதனையுடன் தீர்வு கிடைக்கப் போகிறது. இதுகுறித்த வீடியோ இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதன் விளக்கத்தைப் பார்த்துவிட்டு வீடியோவைப் பார்வையிடுவது தெளிவுதரும்.
எதிர்வரும் காலங்களில் உருவாகும் செல்லிடப்பேசிகள் பேப்பரைப் போன்று மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும் வளைந்துகொடுக்கும் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் காணப்படும் என கணனி விஞ்ஞானிகள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கனடா ஒன்ரியோவின் குயின்ஸ் பல்கலைக்கழக, மனித ஊடக ஆய்வு மையத்தின் பணிப்பாளர் Roel Vertegaal, 'பேப்பர் செல்லிடப் பேசி'களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள கணனிக் கருத்தரங்கில் இதனை அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
அரிசோனா மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த செல்லிடப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இதனை நெகிழ்வுத்தன்மையுடைய ஐபோன் என அழைக்கின்றனர்.
அகலம் குறைந்த, நெகிழ்வுத்தன்மையுடைய திரையிலான இந்தத் தொலைபேசியில் என்னவெல்லாம் செய்யலாம் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொதுவாக நாம் அழைப்புக்களை எடுக்க, பாடல் கேட்க, தகவல்களை சேகரிக்க போன்ற சாதாரண தொலைபேசியில் மேற்கொள்ளும் பணிகளை இதில் மேற்கொள்ள முடியும்.
அமேசனின் கின்டல் ஈ ரீடர் (Amazon's Kindle e-reader) கருவியைப் போன்று பேப்பர் செல்லிடப்பேசி தரவுகளை திரையில் கொண்டுவர இலத்திரனியல் மைகளைப் பயன்படுத்துகிறது.
எனினும், செல்லிடப் பேசிகளில் இதுவரை காலமும் திரைக்காக கண்ணாடி பயன்படுத்தப்பட்ட போதிலும் இந்த செல்லிடப் பேசியில் பேப்பர் போன்றதொரு பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடன் அட்டையின் அகலத்தைக் கொண்ட இந்த செல்லிடப் பேசி வளைந்து கொடுக்கக் கூடியதாக காணப்படுகிறது.
தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பிடும் போது, ஆறில் ஒரு பங்கு எடையை மட்டுமே கொண்டுள்ளது. திரையின் அளவு 4 அல்லது 3.7 அங்குலமாகும். கைக்கு அடக்கமானது மட்டுமன்றி இந்த செல்லிடப் பேசிகள் இயற்கைக்கும் பாதகமற்றது என இதன் படைப்பாளிகள் உறுதி வழங்கியுள்னளர்.
மிக மெல்லியதாகக் காணப்பட்ட போதிலும் இந்த செல்லிடப் பேசிகள் உறுதியானவை. மிகவும் குறைந்தளவு மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பேப்பர் சொல்லிடப்பேசி உத்தேச மாதிரியை தயாரிப்பதற்கு 7,000 முதல் 10,000 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பேப்பர் செல்லிடப்பேசிகள் வர்த்தக ரீதியான பண்டமாக இன்னமும் உருவாகவில்லை.
எதிர்வரும் 5 முதல் 10 ஆண்டு காலப்பகுதியில் நெகிழ்வத்தன்மையுடைய திரைகள் ஆய்வு கூடத்திலிருந்து சந்தைகளை நோக்கி பரிணமிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு பதிலாக பேப்பர் செல்லிடப்பேசிகள் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணாடி திரையுடனான கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி அலுத்துவிட்டவர்களும், தொலைபேசியை சுமந்து களைத்துவிட்டவர்களும் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும்.

